search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    குமரி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி இ-மெயில்: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

    குமரி மாவட்ட கலெக்டர் பெயரில் இ-மெயில் முகவரி உருவாக்கி உள்ளதாக போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக குறைதீர்க்கும் நாள் முகாம் கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை.

    பின்னர் தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் குறைகள் மற்றும் கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கலெக்டரின் பெயரில் போலி இ-மெயில் முகவரி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் கலெக்டருக்கு குறைகள் மற்றும் கோரிக்கை மனு அனுப்பியவர்களிடம் சிலர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே சார்பில் கலெக்டரின் முகாம் அலுவலக அதிகாரிகள் ஆன்லைன் மூலம் நேசமணிநகர் போலீசாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த புகார் மனு சைபர் கிரைம் போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் போலி இ-மெயில் முகவரி எந்த செல்போன் எண்ணில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது? அந்த செல்போன் எண்ணின் உரிமையாளர் யார்? அவர் போலி இ-மெயில் முகவரி மூலம் யார், யாரை தொடர்பு கொண்டுள்ளார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் போலீசார் கொடுக்கும் தகவலை கொண்டு நேசமணிநகர் போலீசார் போலியான இ-மெயில் தொடங்கிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×