search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    ஜவ்வரிசிக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி தகவல்

    சரியான தரத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.

    கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலப்படம் இல்லாமல் ஜவ்வரிசி தயாரிப்பது மற்றும் ஜவ்வரிசி தொழிலை பாதுகாப்பது, ஜவ்வரிசிக்கு அதிக விலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களது ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

    இந்தியாவிலேயே சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தான் ஜவ்வரிசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்கின்ற விவசாயிகளும் உள்ளனர்.

    இத்தொழிலில் அதிக லாபம் பெற சிலர் மக்காச்சோள மாவை கலப்படம் செய்வது உள்ளிட்ட சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மற்ற ஜவ்வரிசி உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் இத்தொழிலை நம்பி உள்ளவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

    இத்தொழில் சரியான முறையில் நடைபெற சேலம் சேகோ சர்வ் அமைப்பு பல்வேறு தரக்கட்டுப்பாடுகளையும், தர பரிசோதனைகளையும் மேற்கொண்டு ஜவ்வரிசி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

    மேலும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஜவ்வரிசி ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கேமராக்கள் பொருத்தி மரவள்ளிக்கிழங்்்்்்்்்்கில் இருந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பணி முழுவதும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. மேலும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

    நல்ல முறையில் சரியான தரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசிக்கு கூடுதல் விலை கிடைக்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இந்த கூட்டம் முடிந்ததும் சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் தொழிலில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து கருத்து தெரிவித்தனர். கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்து உள்ளார். கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    சேகோ சர்வ் அனைத்து உற்பத்தியாளர்களையும் கண்காணித்து தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இதேபோல் மரவள்ளிக்கிழங்கிற்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி பொருட்கள் விற்பனை தொடர்பாக முதல்-அமைச்சர் அனுமதியுடன் விரைவில் நல்ல செய்தி வரும். அவரே அதை தொடங்கியும் வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண், சேலம் சேகோ சர்வ் அலுவலர்கள், பல்வேறு ஜவ்வரிசி உற்பத்தி ஆலை சங்கத்தினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×