என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்8 Oct 2020 7:22 AM IST (Updated: 8 Oct 2020 7:22 AM IST)
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் நிறுவனங்கள் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என்றும், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி வினீத்கோத்தாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குடிநீர் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குடிநீர் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது. குடிநீர் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 நிறுவனங்கள் செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தின. மீதமுள்ள 367 நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியது இல்லை. உடனடியாக மூட உத்தரவிடலாம்’ என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், ‘நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ‘தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
பின்னர், வழக்கின் விசாரணையை நவம்பர் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X