search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமகோபாலன்
    X
    ராமகோபாலன்

    இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் நல்லடக்கம்

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் உடல் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    திருச்சி:

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், கடந்த 28-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ராம கோபாலன் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொது சுகாதார பணியாளர்களிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் மரண செய்தியை அறிந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். முக்கிய நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்சுக்குள் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அவரது உடல் அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    அதனை தொடர்ந்து அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில் இந்து முன்னணி அலுவலகம் அமைந்துள்ள தெரு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அந்த தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    திருச்சி மாவட்டம் உறையூர் சீராத்தோப்பு, குழுமணி இந்து முன்னணி பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அவரது உடல் இன்று  காலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் திருச்சி அருகே சீராத்தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

    தனிமனித இடைவெளியுடன் வேத மந்திரங்கள் முழங்க முழு பாதுகாப்புடன் ராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×