search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு
    X
    மீட்பு

    பெங்களூருவில் இருந்து குமரிக்கு கடத்தப்பட்ட 5 வயது சிறுமி மீட்பு

    பெங்களூருவில் இருந்து குமரிக்கு கடத்தப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டார். குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    முக்கியமான பகுதிகளில் ரோந்து சுற்றிவந்து கண்காணித்தபடி இருந்தனர். கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள களியக்காவிளையில் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி, 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோருடன் கணவன்-மனைவி இருவர் சுற்றித்திரிந்தபடி இருந்தனர். மேலும் அவர்களுடன் இருந்த சிறுமி மிகவும் அழுதபடி இருந்தது. அவளது அழுகையை அந்த தம்பதியால் நிறுத்த முடியவில்லை.

    அதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர். கணவன்-மனைவி இருவரும் சிறுமியின் அழுகையை நிறுத்த முடியாமல் இருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே அவர்களிடம் குழந்தை ஏன் அழுகிறது? நீங்கள் யார்? என்று விசாரித்தினர்.

    அப்போது அவர்கள், கேரள மாநிலம் வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்த ஜோசப்ஜான்(வயது44), எஸ்தர் என்றும், தன்னுடன் இருப்பது தங்களது குழந்தைகள் என்றும் கூறினார். மேலும் போலீசார் கேட்ட சில கேள்விகளுக்கு கணவன்- மனைவி இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினார்.

    இதனால் போலீசாரின் சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து கணவன்-மனைவி மற்றும் 2 குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு கணவன்-மனைவி இருவரிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினார்கள். அப்போதும் அவர்கள் தங்களது குழந்தைகள் என்றே கூறியிருக்கின்றனர்.

    ஆனால் அவர்களது பதில் போலீசாருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே சிறுவன் மற்றும் சிறுமியை தனியாக அழைத்துச்சென்று நைசாக பேசி நீங்கள் யார்? என்று விவரம் கேட்டனர். அப்போது அந்த சிறுவன், கணவன்-மனைவி இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பெங்களூருவில் இருந்து சிறுமியை கடத்தி வந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியிடம் கேட்டனர். அப்போது தனது பெயர் லோகிதா என்றும், தன்னுடைய தாயின் பெயர் கார்த்தீஸ்வரி எனவும், தனது ஊர் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதி என்று கூறினாள். மேலும் தனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அழைத்து வந்த தகவலையும் தெரிவித்தாள்.

    அதேபோல் அந்த சிறுவனிடம் உனது ஊர் எது? என்று போலீசார் கேட்டனர். ஆனால் அவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் நேற்று இரவு இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகள் கூறிய தகவலின் அடிப்படையில் கணவன்-மனைவி இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமியை கடத்தி வந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    ஆனால் எதற்காக கடத்தி கொண்டு வந்தார்கள்? எங்கு அழைத்து செல்கிறார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. அது தொடர்பாக அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அந்த சிறுவனும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கணவன்-மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி மீட்கப்பட்டது குறித்து பெங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமி கூறிய அவளது மற்றும் தாயின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த சிறுமி யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் பெங்களூரு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×