search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சியம்மன் கோவில்
    X
    மதுரை மீனாட்சியம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள்- தொல்லியல் துறை அதிகாரி தகவல்

    1000 ஆண்டு கால வரலாற்றை தெரிவிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்தார்.
    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது. அவர் தலைமையிலான குழு கடந்த ஓராண்டாக மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொல்லியல் ஆய்வு செய்து அதனை புத்தகமாக தொகுத்துள்ளார். இதுகுறித்து சாந்தலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மொத்தம் 410 கல்வெட்டுகள் பற்றி நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 79 கல்வெட்டுகள் முழுமையாக உள்ளது. மீதமுள்ள 301 கல்வெட்டுகள் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து துண்டு கல்வெட்டுகளாக உள்ளது. இவை அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளாவும், ஒன்று சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாகவும் உள்ளது. இதுதவிர கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்ட செய்தி பற்றிய கல்வெட்டு மட்டும் தெலுங்கிலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. அனைத்து கல்வெட்டுகளும் சுவாமி சன்னதி பிரகாரம், கோபுரங்கள், மண்டபங்களில் காணப்படுகிறது.

    முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1190-1216) கால கல்வெட்டு தான் கோவிலில் முதலாவதாக உள்ள கல்வெட்டு ஆகும். அதை தொடர்ந்து வந்த பாண்டிய மன்னர், விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர், மல்லிகார்ச்சுனர், திம்மராயர் கல்வெட்டுகளும், நாயக்கர் காலத்தில் வீரப்பநாயக்கர், திருமலைநாயக்கர், விசயரங்கசொக்கநாதர் ஆகியோரின் கல்வெட்டுகளும் உள்ளன.

    சங்ககாலத்தில் இந்த கோவில் மிக எளிமையாக செங்கல் உள்ளிட்ட பொருட்களால் சிறியதாக இருந்திருக்க வேண்டும். அதன்பின்பு கி.பி.13-ம் நூற்றாண்டில் தான் கோவில் கல் கட்டிடமாக கட்டப்பட்டதும், பாண்டிய மன்னர்கள் அதற்கு உதவியதும் தெரியவருகிறது. அதைதொடர்ந்து விஜயநகர, நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கோவில் பல்வேறு விஸ்தரிப்பு செய்யப்பட்டது தெரிகிறது. எனவே பாண்டிய மன்னர்கள் கோவில் கட்டியதும், திருவிழாக்கள் நடத்தியதற்காக நிலங்கள் கொடுக்கப்பட்டதற்கான முழுமையான விவரங்கள் இந்த கல்வெட்டில் உள்ளது. 1710-ம் ஆண்டு கோபுரத்தில் ஏறி ஒருவர் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய கல்வெட்டும் உள்ளது.

    பச்சையப்பமுதலியார் ஒரு லட்சம் வராகன் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தும், அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கில கல்வியை போதிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது குறித்து கல்வெட்டில் உள்ளது. கோவில் உருவானது முதல் சுவாமியின் பெயர் திரு ஆலவாய் உடைய நாயனார், நம்பி சொக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் பெயர் 1898-ம் ஆண்டிற்கு பின்னரே தான் வந்துள்ளது. இதன் மூலம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய கல்வெட்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது.

    1250-ம் ஆண்டு காலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் இயற்கை பேரிடர் அழிவை சந்தித்துள்ளது. அதில் சுவாமியின் கருவறை, நடராஜர் சன்னதி, கோபுரம் போன்றவை சேதம் அடைந்துள்ளது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது. மேலும் அதே காலத்தில் கோவிலுக்கான தேரும் செய்யப்பட்டதாக கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் ஆரம்ப காலம் 1190-ம் ஆண்டு என்பது தெரியவருகிறது.

    திருவிளையாடல் புராணம் 13-ம் நூற்றாண்டில் எழுதிய நூல் அதில் சொல்கின்ற தனஞ்சயன் என்ற வணிகன் சிவலிங்கத்தை கண்டுபிடித்தான். அதன்பிறகு இந்திரன் இந்த கோவிலை கட்டியதாக புராணம் சொல்கிறது. அதே காலக்கட்டத்தில் தான் இந்த கோவிலை கட்ட தொடங்கியுள்ளனர். இதன் மூலம் புராணம் ஓரளவு வரலாற்று செய்தியை வித்தியாசமாக பதிவு செய்துள்ளதை காணமுடிகிறது.

    இந்த கோவிலுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு கல்வெட்டு ஆயிரங்கால் மண்டத்தில் ஒரு மேடையில் உள்ளது. அதில் கி.பி.700-ம் ஆண்டில் மாறவர்மன்அரிகேசரி என்ற நின்ற சீர்நெடுமாறன் வைகை ஆற்றின் குறுக்காக ஒரு தடுப்பு அணை கட்டி அதிலிருந்து கால்வாய்கள் பிரித்து திருப்புவனத்திற்கு தெற்கே உள்ள சாழ்நாட்டிற்கும், திருச்சுழிக்கு கிழக்கே உள்ள பருத்திக்குடி நாட்டிற்கும் நீர்பாசனம் செய்து கொடுத்ததாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பாண்டிய மன்னன் வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டிய வரலாறு தெரியவருகிறது. இதுதவிர 800 ஆண்டுகளுக்கு முன்னர் ஐப்பசி மாதம் நடைபெறும் விழா தடைபட்டு பின்னர் கார்த்திகை மாதத்தில் நடைபெற்றது பற்றிய குறிப்பும் உள்ளது. இந்த தகவல் அனைத்தையும் நூலாக தொகுத்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் வழங்கி உள்ளேன். விரைவில் அந்த நூல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×