search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் செத்து மிதப்பதை காணலாம்
    X
    திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் செத்து மிதப்பதை காணலாம்

    திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் செத்து மிதந்தன- பக்தர்கள் குளிக்க தடை

    திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் செத்து மிதந்ததால் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் முருகப்பெருமான் பாலகனாக அவதரித்ததாக புராணம் கூறுகிறது. தினமும் அதிகாலையில் மேளதாளங்கள் முழங்க சரவணப்பொய்கையில் இருந்து ஒரு வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு சென்று பலி பீடத்தில் ஊற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சரவணப்பொய்கையில் நீராடி வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கோவிலில் நடைபெறக்கூடிய கந்த சஷ்டி திருவிழாவின்போது காப்புக்கட்டி விரதம் இருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சரவணப்பொய்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீன்கள் செத்து மிதந்தன. அதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. அதனால் பொய்கையில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லக்கூடிய திருமஞ்சன நிகழ்ச்சி சில மாதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சரவணப்பொய்கைக்குள் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை சுழற்சிமுறையில் சுத்தப்படுத்தியது. ஆனால் இந்த பணி முழுமையாக தொடரவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பொய்கைக்குள் திடீரென்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்தன.

    இதைதொடர்ந்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. மேலும் உள்ளூர் மக்கள் குளிப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை. சரவணப்பொய்கையில் மீன்கள் பிடிப்பது தொடர்பாக உரிம ஏலம் எடுப்பவர்கள் இடையே போட்டியின் காரணமாக குளத்தில் விஷம் கலந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பொய்கையை பாதுகாக்கும் பொருட்டு மீன் பிடிக்கும் உரிம ஏலத்தை முழுமையாகவே தவிர்க்க வேண்டும் என்றனர்.

    மேலும் கோவில் உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், என்ஜினீயர் ராமர், துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், மணியம் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் செத்த மீன்கள் யாவும் பொய்கையில் இருந்து அகற்றப்பட்டன.

    மேலும் கூடுதலாக ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. மேலும் தண்ணீர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. நேரடியாக வந்து ஒரு பாட்டிலில் பொய்கையில் இருந்து ஆய்வுக்காக தண்ணீர் எடுத்து சென்றார். மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சரவணப்பொய்கையில் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×