search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 200 கடைகளுக்கு மட்டும் அனுமதி

    திருமழிசை மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் செயல்பட முதற்கட்டமாக அனுமதி கொடுத்துள்ளனர்.
    சென்னை:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

    திருமழிசை மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் செயல்பட முதற்கட்டமாக அனுமதி கொடுத்துள்ளனர்.

    28-ந்தேதி மார்க்கெட் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் 27-ந்தேதி இரவு 9 மணிக்கே காய்கறி லாரிகள் மார்க்கெட்டுக்குள் வர அனுமதிக்கப்படும்.

    காய்கறிகளை வாங்க வரும் கடைக்காரர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி செல்லலாம். ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    இது சம்பந்தமாக சி.எம்.டி.ஏ. அறிவித்துள்ள நிபந்தனைகள் வருமாறு:-

    அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

    அங்காடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

    அங்காடிக்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

    தனி நபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றது.

    அங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் முக கவசம், உடல் வெப்ப தெர்மோ மீட்டர், ஆக்ஸி மீட்டர் மற்றும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்.

    அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். அதனை உடுத்திய பணியாளர்களே கடைகளில் அனுமதிக்கப்படுவர்.

    அங்காடிக்குள் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அங்காடிக்கு வரும் அனைத்து நபர்களும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் கட்டாயமாக்கப்படும்.

    கடையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு கடைகளிலும் கடையின் நுழைவுவாயில் முன்பு பெடல் சானிடைசர் வைக்க வேண்டும். அனைவரும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்ட பிறகே பொருட்களை தர வேண்டும்.

    வியாபாரிகள் தங்கள் கடைகளுக்குள் வியாபாரம் செய்ய வேண்டும். வெளியே மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது.

    சாலையோர விற்பனை மற்றும் அங்காடிக்குள் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

    மொத்த காய்கறி விற்பனை அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். காய்கறி அங்காடியிலுள்ள நுழைவு வாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.

    அங்காடியில் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அங்காடிப் பகுதியில் ஒருவழிப் பாதை அறிமுகப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீர் செய்யப்படும்.

    கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் அங்காடி நிர்வாகக் குழுவால் கண்காணிக்கப்படும்.

    பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு 10 நாட்கள் கழித்துதான் சிறு, மொத்த வியாபாரத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×