search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து அனைத்து கட்சியினர் போராட்டம்- 150க்கும் மேற்பட்டோர் கைது

    வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து கும்பகோணத்தில் அனைத்து கட்சியினர் நடத்திய போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    இன்றியமையா பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைப்பொருள் விற்பனை மற்றும் வணிகம் மேம்பாடு சட்டம், உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பண்ணைசேவை ஒப்பந்த சட்டம் ஆகிய 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த புதிய சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று அவர்கள் தங்களது 2-வது கட்ட போராட்டமாக தஞ்சை ரெயிலடியில் காவிரி உரிமை மீட்பு குழு தஞ்சை மாநகர செயலாளர் ராமசாமி தலைமையில் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து புதிய வேளாண் சட்ட நகலை தீ வைத்து எரித்தனர்.

    இதேப்போல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் உச்சி பிள்ளையார் கோவிலில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×