search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தழகன்
    X
    முத்தழகன்

    திருட வந்த இடத்தில் போதையில் படுத்து தூங்கிய என்ஜினீயர்

    திருட வந்த இடத்தில் வீட்டின் கதவை உடைக்க முடியாததால் போதையில் அங்கேயே படுத்து தூங்கிய என்ஜினீயரை, வீட்டின் உரிமையாளரே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
    பூந்தமல்லி:

    மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 53). இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால் பிளம்பரை வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றனர்.

    அங்கு வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதை கண்டு யார்? என்று கேட்டார். உடனே அந்த வாலிபர், வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக வேகமாக கீழே இறங்கி ஓடினார். ஆனால் வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததால் அவரால் வெளியே செல்ல முடியவில்லை.

    பிளம்பருடன் சேர்ந்து அந்த வாலிபரை பிரபாகரன் மடக்கிப்பிடித்தார். அதில் அந்த வாலிபர், பிரபாகரன் வீட்டில் திருட வந்தது தெரிந்தது. உடனடியாக அவரை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரணை செய்ததில் பிடிபட்ட வாலிபர், கொளத்தூரை சேர்ந்த முத்தழகன் (வயது 23) என்பதும், என்ஜினீயரிங் பட்டதாரியான அவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தும் தெரிந்தது.

    வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக இந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும்போது பிரபாகரன் வீடு தனியாக இருப்பதை கண்ட முத்தழகன், கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதற்காக நள்ளிரவில் போதையில் மோட்டார் சைக்கிளை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு பிரபாகரன் வீட்டின் சுற்றுச்சுவரை எகிறி குதித்து உள்ளே புகுந்தார்.

    பின்னர் மாடிக்கு சென்ற அவர், மேலே உள்ள வீட்டின் கதவை உடைக்க முடியாததால் கதவை திறந்த பிறகு கொள்ளை அடிக்கலாம் என நினைத்து, மொட்டை மாடிக்கு சென்று பதுங்கி இருந்தார். ஆனால் போதையில் இருந்த அவர், அப்படியே தூங்கி விட்டார்.

    அதற்குள் பொழுது விடிந்து விட்டது. காலையில் எழுந்த முத்தழகன், வீட்டில் ஆள்நடமாட்டம் இருந்ததால் கீழே சென்றால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து இரவில் தப்பிச்செல்லலாம் என நினைத்து மாலை வரை கொளுத்தும் வெயிலில் உணவு ஏதும் உண்ணாமல் அங்கேயே பதுங்கி இருந்தார்.

    அப்போது வீட்டின் உரிமையாளர் பிளம்பருடன் மொட்டை மாடிக்கு வந்தபோது சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. முத்தழகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    குடும்ப சூழ்நிலைக்காக திருடச்சென்ற இடத்தில் போதையில் தூங்கி விட்டதால் பசியால் பல மணி நேரம் தவித்ததுடன், திருடுவதற்கு முன்பே போலீசாரிடம் என்ஜினீயர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×