search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    கடன் தொல்லையால் விபரீதம்- 2 மகள்களுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை

    விழுப்புரத்தில் கடன் தொல்லை காரணமாகவும், கணவர் மது குடித்து விட்டுவந்து தகராறு செய்ததாலும் 2 மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிகரை பள்ளிவாசல்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு பவித்ரா (17), சர்மிளா (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கஜேந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் குடும்ப செலவுக்காக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். உடனே கவிதா அவரது கணவரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்பதால் வேலைக்கு செல்லும்படியும், பணத்துக்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

    இதில் கணவன் மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே கஜேந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அதன்பின்னர் கவிதா மனவேதனையில் வீட்டில் இருந்தார். எனவே கவிதா கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள்களுடன் புறப்பட்டு கொண்டிருந்தார்.

    அப்போது கஜேந்திரன் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த கவிதா கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போதை தலைக்கேறிய கஜேந்திரன் வீட்டில் படுத்து தூங்கி விட்டார்.

    கடன் தொல்லை காரணமாகவும், கணவர் மது குடித்து விட்டுவந்து தகராறு செய்வதாலும் மனமுடைந்த கவிதா அவரது மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வி‌ஷத்தை எடுத்து கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு தனது மகள்கள் பவித்ரா, சர்மிளா ஆகிய 2 பேருக்கும் வி‌ஷத்தை கவிதா கொடுத்தார். பின்னர் கவிதாவும் வி‌ஷம் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இன்று காலை நீண்டநேரமாகியும் கவிதாவின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கவிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கஜேந்திரன் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தார்.

    உடனே தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு கவிதா, மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கஜேந்திரனை எழுப்பி நடந்த சம்பவத்தை கூறினர்.

    உடனே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகள்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கஜேந்திரன் கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கவிதா, அவரது மூத்த மகள் பவித்ரா ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சர்மிளாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×