search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 65 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 72 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த தண்ணீர் தமிழகம் நோக்கி காவிரியில் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இரு மாநில எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்த படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓடுகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 20-ந் தேதி 11 ஆயிரத்து 241 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரியில் 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 89.92 அடியாக இருந்து மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 91.45 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் சுமார் 1½ அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேலும் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம் மற்றும் முதலைப்பண்ணை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதேபோல சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பண்ணவாடி பரிசல்துறை மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×