search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தட்டார்மடம் வியாபாரி கொலை செல்வன்
    X
    தட்டார்மடம் வியாபாரி கொலை செல்வன்

    தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நிலத்தகராறில் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  சரண் அடைந்த இருவரையும் 3 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து நிலத்தகராறில் தூத்துக்குடி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×