search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு தங்க-வைர நகைகளை கொள்ளையடித்த கும்பல்

    தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு தங்க- வைர நகைகளை கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). நாட்டு வைத்தியர். இவரது மனைவி மேரிகுட்டி (43), இவர்களுடன் உறவினரான செல்வம் (63) என்பவரும் வசித்து வருகிறார்.

    ரவீந்திரனுக்கு சொந்தமான மற்றொரு வீடும் அப்பகுதியில் உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார். நேற்று ரவீந்திரனின் வீட்டுக்கு 6 பேர் முகத்தில் முக கவசம் அணிந்தவாறு வந்தனர்.

    அவர்கள், ரவீந்திரனிடம் வீட்டை விலைக்கு வாங்குவது தொடர்பாக பேசினர். தொடர்ந்து ரவீந்திரனும், செல்வமும், அந்த 6 பேரையும் வீட்டை சுற்றி காண்பிப்பதற்காக அழைத்து சென்றனர்.

    அந்த வீட்டுக்குள் அனைவரும் சென்றவுடன் 6 பேரும் சேர்ந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து ரவீந்திரன், செல்வத்தை மிரட்டினர். பின்னர் அங்கு ரவீந்திரனை கட்டி போட்டு அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

    பின்னர் செல்வத்தை அழைத்து கொண்டு ரவீந்திரனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மேரிகுட்டியை மிரட்டி செல்வதை கட்டி போட்டனர். தொடர்ந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடினர். 104 கிராம் வைர நகைகள் மற்றும் 100 கிராம் தங்கநகைகள், 3 விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது.

    ரவீந்திரனிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை கும்பலின் பேச்சு வழக்கு திருச்சி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் போல இருந்தது தெரியவந்தது. எனவே கொள்ளையர்கள் திருச்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியில் வீட்டில் தனியாக இருந்த தொழில் அதிபரின் மனைவியை கட்டிப்போட்டு 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தது. அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றி இதுவரை துப்பு கிடைக்கவில்லை.

    இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளர்களை செல்லோ டேப் கொண்டு கட்டிப்போட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த 2 வீடுகளும் தனியாக உள்ள வீடுகள். எனவே நகரில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிவை காட்டி வருகின்றனரா? எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×