search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- திருமாவளவன்

    விவசாயிகளுக்கு துரோகமிழைக்கும் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். விவசாயிகளின் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தாம் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார்.

    இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் நேற்று வெளிநடப்பு செய்த போதும், குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இந்த மசோதாக்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இது குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விவசாயிகளுக்கு துரோகமிழைக்கும் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    “விவசாய உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி செய்தல்) சட்டம்-2020; விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்) விலை ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் - 2020; மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம் -2020 ஆகியவை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மோடி அரசு இந்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாகப் பிறப்பித்திருந்தது. அவற்றை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் அது தீவிரமடைந்துள்ளது. இதனால் அகாலிதளம் கட்சி இப்போது பாஜக கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்த விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

    ஆனால், இந்தச் சட்டங்கள் நிறைவேற அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது விவசாய சமூகத்திற்கு ஆளுங்கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும்.

    விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மோடி அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத்துழைக்கும் அதிமுக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.  
    Next Story
    ×