search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை விமான நிலையம்
    X
    மதுரை விமான நிலையம்

    கடந்த 2 மாதத்தில் மதுரை விமான நிலையத்திற்கு 56,400 பயணிகள் வருகை

    கடந்த 2 மாதத்தில் மதுரை விமான நிலையத்தில் இருந்து 1,236 விமான சேவைகள் நடைபெற்றிருக்கிறது. இதில் 56,400 பயணிகள் மதுரைக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 4 வெளிநாட்டு விமானங்களும், 21 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 25 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே விமான சேவை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டுமே சிங்கப்பூர், சார்ஜா, மஸ்கட், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மதுரைக்கு வந்து செல்கின்றன.

    அதன்படி ஜூலை மாதத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 582 விமான சேவை நடைபெற்று இருக்கிறது. அந்த விமானங்கள் வழியாக அந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 ஆயிரத்து 134 பேர் மதுரைக்கு வந்திருக்கிறார்கள். அதுபோல், ஆகஸ்டு மாதத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 654 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில், 34 ஆயிரத்து 266 பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். விமான சேவையின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் சற்று அதிகம்.

    மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் மதுரைக்கு வந்த நபர்களில் மே மாதத்தில் ஒருவரும், ஜூன் மாதத்தில் 85 பேரும், ஜூலை மாதத்தில் 87 நபர்களும், ஆகஸ்டு மாதத்தில் 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக மதுரைக்கு வந்து சென்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கொரோனா பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதன் மூலம் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் மதுரை விமான நிலையம் பாதுகாப்பானதாக இருக்கிறது என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் விமான சேவையை மட்டுமே பயன்படுத்தினர். குறிப்பாக வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு விமான போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். அதன் அடிப்படையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1,236 விமான சேவைகள் நடைபெற்றுள்ளன. அதன்படி 56,400 பயணிகள் மதுரைக்கு வந்து சென்றிருக்கின்றனர்.

    பயணிகளின் எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் இருப்பதை விட குறைவு தான். இருப்பினும் கொரோனா தாக்கம் உள்ள சூழ்நிலையில் அதிக அளவிலான பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி இருப்பது விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது. வரும் நாட்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றார்.
    Next Story
    ×