search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் எழில்மிகு தோற்றத்தை காணலாம்
    X
    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் எழில்மிகு தோற்றத்தை காணலாம்

    கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்- ஊட்டியிலும் உற்சாகம்

    கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொடைக்கானல், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
    கொடைக்கானல்:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் மூடப்பட்டு வெறிச்சோடின. இந்தநிலையில் நேற்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலுக்கு வருகை தருகிற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும், வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    கொடைக்கானலில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் தவித்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் முதல் நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் பிரையண்ட் பூங்காவில் பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குவது வாடிக்கை. ஆனால் தற்போது பெரும்பாலான செடிகள் பூக்கள் இன்றி காணப்பட்டன. நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் பிரையண்ட் பூங்காவை கண்டுகளித்தனர்.

    கொடைக்கானல் என்றவுடன், சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பது அங்கு நடைபெறும் படகு சவாரி தான். நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொடைக்கானலை பொறுத்தவரை இயற்கை எழில்கொஞ்சும் 30 சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் நகர்ப்பகுதியில் பார்க்கக்கூடிய இடங்கள் 16-ம், வனப்பகுதியில் 14 இடங்களும் அடங்கும். தற்போது நகர்ப்பகுதியில் உள்ள 3 பூங்காக்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பர்லேக் வியூ, வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

    அதேநேரத்தில் சிட்டி வியூ, அருங்காட்சியகம், பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சுவீடு அருவி, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த கற்குகை, ‘யானை வேலி‘ என்று அழைக்கப்படும் யானைகள் நடமாடும் இடம், பியர்சோழா, பாம்பார் அருவிகள் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதேபோல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பேரிஜம் ஏரி, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, தொப்பி தூக்குபாறை, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட 16 சுற்றுலா இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகர் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    175 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா காலை 7 மணி முதல் திறந்து விடப்பட்டது. முதல் நாள் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. அவர்கள் இயற்கை அழகுடன் கூடிய பச்சை பசேலென காட்சி அளித்த புல் வெளி மைதானத்தில் உலா வந்ததுடன் செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை உற்சாகமாக கண்டு ரசித்தனர். நடைபாதையில் நடந்து சென்றபடி பூங்காவை பார்வையிட்டனர்.

    பூங்காக்கள் திறக்கப்பட்டதால் ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை கவரும் வகையில் மலர் மாடத்தில் 7, 000 பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு பின்னர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, காட்டேரி பூங்கா திறக்கப்பட்டு உள்ளதால், அதனருகே கடை வைத்து உள்ள வியாபாரிகள் நேற்று கடைகளை திறந்தனர்.
    Next Story
    ×