search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால நெல்மணிகள், மனித எலும்புகள்
    X
    சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால நெல்மணிகள், மனித எலும்புகள்

    சிவகளை அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகள் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதா?

    சிவகளை அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றும், அவற்றை மரபணு பரிசோதனைக்காக கொண்டு செல்வதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    செய்துங்கநல்லூர்:

    தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் கடந்த மே 25-ந் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் 10 தொல்லியல் அதிகாரிகள் மற்றும் ஆய்வு மாணவர்களும் சிவகளை பகுதியை சேர்ந்த 80 பொதுமக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிவகளை பரும்பு பகுதியில் 23 இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டதில் தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதைத்தொடந்து முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணி கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

    இதில் மண்பாண்ட கிண்ணங்கள், குவளைகள், பழங்கால நெல்மணிகள், அரிசி, சாம்பல், மனிதர்களின் பல் தாடை எலும்புகள், பற்கள் போன்றவை இருந்தன.

    அவைகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றும், அவற்றை மரபணு பரிசோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்வதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அகழாய்வில் கிடைத்த மனிதர்களின் பல் தாடை எலும்புகள், பற்கள் போன்றவற்றை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இதன்மூலம் இந்த மரபணுடைய மனிதர்கள் தற்போது எப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெரியவரும்.

    Next Story
    ×