search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் வைகை ஆற்றில் புதுவெள்ளம் செந்நிறத்தில் ஓடிய காட்சி
    X
    தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் வைகை ஆற்றில் புதுவெள்ளம் செந்நிறத்தில் ஓடிய காட்சி

    முல்லைப்பெரியாற்றில் சங்கமித்த வைகை புதுவெள்ளம்- விவசாயிகள் மகிழ்ச்சி

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு, முல்லைப்பெரியாற்றுடன் புதுவெள்ளம் சங்கமித்தது.
    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்தும், வருசநாடு அருகே மூலவைகை பகுதியில் இருந்தும் தண்ணீர் வருகிறது. கடந்த 2 மாத காலமாக முல்லைப்பெரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 62 அடியை எட்டியது.

    முல்லைப்பெரியாற்று தண்ணீர் வைகை அணைக்கு வந்த போதிலும், மூலவைகை தண்ணீர் அணைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலவைகை பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவில் இந்த புதுவெள்ளம் கண்டமனூர், பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை கடந்து, அம்மச்சியாபுரம் அருகே முல்லைப்பெரியாற்றுடன் சங்கமித்தது.

    தமிழ் இலக்கிய நூலான குறுந்தொகையில், ‘செம்புலப் பெயனீர் போல’ என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது. அதாவது, செம்மண்ணில் பெய்த மழைநீர் அந்த மண்ணோடு கலந்து பிரிக்க முடியாதவாறு ஆகிவிடும் என்பது அதன் அர்த்தம்.

    இந்த பாடல் வரிக்கு ஏற்ப, வைகையில் வந்த புதுவெள்ளம், செம்மண்ணில் கலந்து செந்நிறமாக காட்சி அளித்தது. இந்த புதுவெள்ளம் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமித்தபோது ஆற்றில் இருவேறு நிறங்களில் தண்ணீர் ஓடியது.

    இரு ஆறுகளும் சங்கமித்து வைகை அணையை நோக்கி பயணித்தது. எனவே, தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் விரைவில் வைகை அணை நிரம்பும் வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×