search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    மதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்கியது- பயணிகள் உற்சாகம்

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்கி உள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
    மதுரை:

    மதுரையில் கொரோனா பரவல் காரணமாக ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வை அறிவித்து உள்ளது.

    மதுரை கோட்டத்தில் சென்னை- மதுரை, சென்னை- காரைக்குடி, சென்னை- தூத்துக்குடி ஆகிய 3 வழித்தடங்களில் முன்பதிவுடன் கூடிய 4 சிறப்பு ரெயில்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

    இதனை தொடர்ந்து மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இதற்காக 100-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தனர்.

    மதுரை- சென்னை இடையேயான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 7 மணிக்கு புறப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பயணிகள் 2 மணி நேரம் முன்பாகவே முகக்கவசம் அணிந்த நிலையில், மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்கு அவர்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பிறகு பயணிகளின் உடல் வெப்பநிலை, தெர்மல் ஸ்கேனர் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    அதன்பிறகு பயணிகள் முன்பதிவு சீட்டு உடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக குறியீடுகள் வரையப்பட்டு இருந்தன.

    மதுரை ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 6 மணிக்கு கொண்டு வநது நிறுத்தப்பட்டது.

    அந்த ரெயிலில் 17 பெட்டிகள் இடம் பெற்று இருந்தன. இதில் பயணிகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02636) மதுரையில் இருந்து புறப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 6 மாத இடைவெளிக்கு பிறகு, இன்று முதலாவதாக, சென்னைக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது, இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

    இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊரடங்குக்கு முன்பாக மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், தினமும் காலை 7 மணி அளவில் சென்னைக்கு புறப்படுவது வழக்கம்.

    அதே நேரத்தில் மதுரை- சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்று உள்ளது. இதில் 537 பயணிகள் பயணம் சென்று உள்ளனர்.

    இதில் 3 குளிர்சாதனப்பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு உணவு விநியோகப்பெட்டி ஆகிய 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை- சென்னை சிறப்பு ரெயில் இன்று மதியம் 2.35 மணியளவில் சென்னை எழும்பூருக்கு செல்லும்.

    மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் 4 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று டிக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.

    மதுரை கோட்டத்தை பொருத்தவரை கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் முன்பதிவு வாயிலாக பயணிகளிடம் கட்டணமாக ரூ.9.93 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று மதியம் 1.40 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் இன்றிரவு 9.15 மணிக்கு மதுரைக்கு வரும்.

    காரைக்குடி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02606) இன்று அதிகாலை 4.55 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டது. அந்த ரெயில் இன்று மதியம் 12.10 மணிக்கு சென்னை செல்லும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×