search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்
    X
    கோவில்

    கொரோனாவை கட்டுப்படுத்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வினியோகம்

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. கோவில்களில் வாழை இலை போட்டு அன்னதானம் வழங்குவதற்கு பதிலாக தற்போது பார்சல் கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில் மதியம் அன்னதான திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் பெரிய கோவில்களில் தினமும் 100 பேருக்கு வாழை இலை போட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் கோவில்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வால் கடந்த 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன.

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. கோவில்களில் வாழை இலை போட்டு அன்னதானம் வழங்குவதற்கு பதிலாக தற்போது பார்சல் கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவில்களிலும் அன்னதான திட்டத்தில் சாப்பாடு, சாம்பார், கூட்டு, பொறியல் ஆகியவை பார்சலாக கட்டிகொடுக்கப்படுகின்றன.

    மதியம் 12.30 மணி முதல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு இந்த பார்சல் உணவு கொடுக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அதிகாரி பாலு கூறியதாவது:-

    கொரோனா காரணமாக கோவில்கள் கடந்த 5 மாதமாக மூடிக்கிடந்தது. மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலும் மூடப்பட்டது. கோவில் மூடப்பட்ட காலங்களில் அன்னதான திட்டத்துக்கான உணவை பார்சலில் கட்டி பஞ்சாயத்து அலுவலகங்கள் மூலம் ஏழை மக்களுக்கு வினியோகம் செய்து வந்தோம். இப்போது கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் அன்னதான திட்டத்துக்கு பல்வேறு விதி முறைகளை அரசு வகுத்துள்ளது.

    அதனை பின்பற்றி பார்சல் மூலம் அன்னதான உணவை பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். அரசின் மறு உத்தரவு வரும் வரை இதேபோல் பார்சலில் அன்னதானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×