search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்பி வசந்தகுமார்
    X
    எம்பி வசந்தகுமார்

    சோகத்தில் மூழ்கிய வசந்தகுமார் எம்.பி.யின் சொந்த ஊர் மக்கள்

    வசந்தகுமார் எம்.பி. மரணம் அடைந்தது பற்றி அறிந்ததும் அகஸ்தீஸ்வரம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, கறுப்புக் கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    வசந்த குமார் எம்.பி.யின் சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஆகும். அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. வசந்தகுமார் எம்.பி. மரணம் அடைந்தது பற்றி அறிந்ததும் அந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    இன்று அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பகுதிகளில் கறுப்புக் கொடிகளும் ஏற்றப்பட்டு இருந்தது. காங்கிரசார் பல இடங்களில் வசந்தகுமார் எம்.பி.யை நினைவுகூர்ந்து பேனர்களை வைத்திருந்தனர்.

    தங்கள் ஊரின் பெயரை உலகறியச் செய்தவர்களில் வசந்தகுமார் எம்.பி.யும் ஒருவர். உழைப்பால் உயர்ந்த அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    வசந்தகுமார் எம்.பி.யின் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் உள்ளனர். அவர்கள் இன்று இரவு தான் சொந்த ஊருக்கு வர உள்ளனர். இருந்தாலும் குமரி மாவட்டத்தில் உள்ள வசந்தகுமார் எம்.பி.யின் நெருங்கிய உறவினர்கள் இன்று காலை முதலே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வீட்டுக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    வசந்தகுமார் எம்.பி. உடல் சென்னையில் இருந்து இன்று பிற்பகலுக்கு பிறகு அகஸ்தீஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. நள்ளிரவில் உடல் இங்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பின்னர் நாளை காலை 10 மணிக்கு வசந்தகுமார் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. வீட்டில் இருந்து அரைகிலோ மீட்டர் தூரத்தில் அவரது குடும்ப தோட்டம் உள்ளது. அங்கு தான் வசந்தகுமார் எம்.பி.யின் பெற்றோர் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அருகே வசந்தகுமார் எம்.பி.யின் உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×