search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ரூ.3,300 கோடி செலவில் காவிரி உபரி நீரை பயன்படுத்த புதிய திட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரி உபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    திருவாரூர்:

    தமிழகத்தில் மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்தும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

    நேற்று காலை கடலூர் மாவட்டத்திலும், மாலையில் நாகையிலும் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.

    இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

    ஆய்வு கூட்டத்துக்கு முன்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் வீட்டுமனைப்பட்டா, கோவிட்-19 சிறப்பு உதவி தொகுப்பின் கீழ் புலம்பெயர்ந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கான மானியம் என 781 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.5 கோடியே 52 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதன் அடையாளமாக பயனாளிகளில் 9 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் விலையில்லா வீட்டு மனை, பசுமை வீடு, பிரதம மந்திரி தொகுப்பு வீடு, அம்மா இரு சக்கர வாகனம், திட்டம் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதையடுத்து திருவாரூர் மாவட்டத்துக்கு வர உள்ள 23 புதிய திட்டப்பணிகளை 22 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் 11 கோடியே 50 லட்சம் மதிப்பில் 14 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    கொரோனா தொற்றால் நாம் சோதனையான காலத்தில் இருக்கிறோம். இருப்பினும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததின் பயனாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இறப்பின் விகிதம் குறைந்துள்ளது. மக்கள் அரசு சொல்லும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே தமிழகம் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விடும்.

    அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மக்களிடையே கொண்டு செல்லவும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தன்னலம் பாராமல், சுயநலமின்றி அரசு அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர், தூய்மை பணியாளர்கள், வருவாய், சுகாதார துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

    அரசு அறிவிப்புக்கு உறுதுணையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வேதனையை அளிக்கிறது. அவர்களுக்கு அரசின் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது நோய் தொற்ற வாய்ப்பு ஏற்படும் என தெரிந்தும், அரசின் அறிவிப்புக்கு ஏற்ப பணியில் ஈடுபட்டு தொற்றால் உயிரிழந்த அலுவலர்களின் பணி தன்னலமற்றது. அவர்களது குடும்பத்துக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    சோதனையான இக்காலகட்டத்தில் மக்களுக்கு தேவையாக அத்தியாவசிய பொருட்கள் இடையூறு இன்றி குறிப்பிட்ட இடைவெளி காலங்களில் முறையாக வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டான இந்நத சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு, பொருட்கள் சென்று சேர்ந்துள்ளது.

    கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் தங்கு தடையின்றி காய்கறிகள், மளிகை பொருட்கள் கிடைக்கும் வகையில் அரசு மூலம் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி இடையே ரூ.336 கோடியில் இருவழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 70 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1300 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    காவிரியில் அபரிமித உபரிநீர் திறக்கப்படும்போது அது கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடைமடை வரை வடிகால் வசதிகளை சிறப்புற ஏற்படுத்தி காவிரியில் வரும் அபரிமித உபரிநீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக கொண்டு செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தமிழக அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே பல்வேறு திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து இன்று மதியம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ரூ.38.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். பின்னர் ரூ.71.27 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் மாலை தஞ்சையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.


    Next Story
    ×