search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கணக்கு
    X
    வங்கி கணக்கு

    விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு- 75 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேட்டால் 75 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் (கிசான் சம்மன்) நிதிஉதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சென்னையில் இருந்து வந்த வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள கணினி மையத்தில் கிசான் சம்மன் நிதிஉதவி திட்டத்தில் அரசு பயன்படுத்தும் கடவுச்சொல், பயனர் குறியீடு போன்றவற்றை பயன்படுத்தி விவசாயிகள் அல்லாதவர்களை சேர்த்து முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அந்த கணினி மையத்துக்கு சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் தனியார் கணினி மையம் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை குறித்த விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வேலாயுதம் கூறுகையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 75 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் விவசாயிகள், விவசாயிகள் அல்லாதோர் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விவசாயிகள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

    இதற்கிடையே கலெக்டர் கிரண்குராலா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 75 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    Next Story
    ×