search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு ஆலை
    X
    பட்டாசு ஆலை

    சிவகாசி பட்டாசு விற்பனையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய கொரோனா

    பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது தயாரிப்புகளை இணையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் ஆர்டர் எடுத்து வருகின்றனர். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் அதிக பட்டாசு ஆலைகள் இயங்கி வருவது அறிந்ததே.

    இந்த பகுதிகளில் இயங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வருகிறார்கள்.

    சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை பெறுகிறார்கள்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு உத்தரவுப்படி பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொண்டன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலைகள் மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளன. ஊரடங்கினால் வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலை பெற்றுள்ளார்கள்.

    மாவட்ட நிர்வாகம் பட்டாசு ஆலைகளுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை கடைபிடித்து அனைத்து பட்டாசு ஆலைகளிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகளை தயாரித்து வருகிறார்கள்.

    சிவகாசி பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கிச் செல்ல கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் இருந்தும் மொத்த வியாபாரிகள் சிவகாசிக்கு வருவதுண்டு. இவர்கள் இங்கு உள்ள விடுதிகளில் ஒருவாரம் தங்கி இருந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு செல்வார்கள். வெளிமாநில மொத்த வியாபாரிகளின் வருகைக்காகவே சிவகாசியில் பல விடுதிகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கும் தடை உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் சிவகாசியில் தேங்க தொடங்கி உள்ளன. சில பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது தயாரிப்புகளை இணையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் ஆர்டர் எடுக்க முயன்றனர்.

    இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெரும்பாலான பட்டாசு ஆலைகள் தங்கள் தயாரிப்புகளை இணையத்தில் வெளியிட்டு அதற்குரிய விலை பற்றியும், அதற்குரிய எண்களையும் பதிவு செய்துள்ளன. எனவே தேவையான எண்ணை குறிப்பிட்டு எவ்வளவு பட்டாசுகள் வேண்டும் என்ற விவரத்தை இ-மெயில் மூலம் தெரிவித்தால் அடுத்த பத்து நாட்களில் சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிக்கு சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த புதிய நடைமுறை குறித்து பட்டாசு ஆலை அதிபர் சிவகாசி செல்வம் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் வட மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் சிவகாசியில் உள்ள பட்டாசு அலுவலகத்திற்கு சென்று ஒவ்வொரு பட்டாசுகளையும் நேரில் பார்த்து அதன் வெடிக்கும் திறன்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அவர்களுக்கு தேவையான ஆர்டர்களை கொடுப்பார்கள்.

    இது போன்ற வெளிமாநில வியாபாரிகளுக்காக இந்தி மொழி தெரிந்த பணியாளர்களை அமர்த்தி அவர்களிடமிருந்து ஆர்டர் பெற்று அவர்களுக்கு தேவையான பட்டாசுகளை லாரி மூலம் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வியாபாரியிடம் இருந்து ஆர்டர் எடுக்க குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 வியாபாரிகளை மட்டும்தான் அந்த பணியாளர் சந்தித்து ஆர்டர் எடுக்க முடியும். ஆனால் தற்போது அப்படியில்லை ஒரு மணி நேரத்தில் அவர்கள் கேட்கும் ஆர்டர்களை இ-மெயில் மூலம் எடுத்து வருகிறோம்.

    இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட பணியாளர் மூலம் அந்த மொத்த வியாபாரியை தொடர்பு கொண்டு சந்தேகத்தை சரி செய்து கொள்கிறோம். இதனால் மொத்த வியாபாரிகள் தங்களது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு வந்து ஒரு வாரம் காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை தற்போது உள்ள கொரோனா காலகட்டத்துக்கு ஒத்துப் போவதால், அடுத்தகட்டத்துக்கு பட்டாசு விற்பனை நகர்ந்து இருக்கிறது என்றும் கூறலாம்.

    கொரோனா முற்றிலும் ஒழிந்த பின்னர் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால் பின்பற்றினால் நேரம் மிச்சமாகும். ஒரு நாளைக்கு 5 முதல் 8 வியாபாரிகளின் ஆர்டர்களை ஒரு பணியாளர் எடுக்க முடியும். எனவே அடுத்து வரும் காலங்களில் இதே நடைமுறையை பின்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த வருட தீபாவளியை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் தீபாவளி கொண்டாட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×