search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையில் மண்மேடுகள், பாறைகள் இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அணையில் மண்மேடுகள், பாறைகள் இருப்பதை படத்தில் காணலாம்.

    நல்லதங்காள் அணையை தூர்வாரவேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    மழைக்காலம் தொடங்குவதற்கு முன் நல்லதங்காள் அணையை தூர்வாரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்பட்டு கடந்த 5.4.2008 அன்று திறந்துவைக்கப்பட்டது. பொன்னிவாடி, நல்லாம்பாளையம், ஆலாம்பாளையம், பெரமியம், தூரம்பாடி, மூலனூர் உட்பட 4744 ஏக்கர் பயன்பெறும் வகையில் ரூ.42 கோடி மதிப்பில் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் வரத்து இருப்பதில்லை. பருவகாலங்களில் கிடைக்கும் நீர் போதுமானதாக இருப்பதில்லை.

    இதனால் இந்த அணை பெரும்பாலான காலங்களில் வறண்டே காணப்படுகிறது. இந்த அணையின் நீர்தேக்க பரப்பளவு 774.74 ஏக்கர் ஆகும். அணையில் 30 கன அடி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அணையின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது இருந்த மண்திட்டுகள், பாறைகள் பழைய வீட்டு சுவர்கள், பாறைகள் ஆகியவை இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. இந்த அணையை தூர்வாரினால் இன்னும் ஒரு மடங்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.

    இது பற்றி விவசாயிகள் மூலனூர் ஜோதிக்குமார், கோணார்பட்டி பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் பிரிவதற்கு முன்பாக இந்த பகுதி ஈரோடு மாவட்டமாக இருந்தது. அப்போது மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான மூலனூர் ஒன்றிய பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். சிலநேரங்களில் குடிதண்ணீருக்கே பெரும் பஞ்சம் ஏற்படும் நிலை இருந்தது. அந்த காலகட்டங்களில் இந்த பகுதிக்கு நல்லதங்காள் ஓடை அணை திட்டம் கிடைக்கப்பெற்றது இந்த பகுதி விவசாயிகளுக்கு கிடைத்த வரபிரசாதம் ஆகும். அப்படிப்பட்ட இந்த அறிய திட்டம் கிடைத்தும் முழுமையாக பயன்படுத்த முடியாதது இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் வருத்தமாக உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா பகுதிகளில் நல்ல மழை பெய்து அணைகள் நிறையும் நிலையுள்ளது. எனவே நல்லதங்காள் ஓடை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைகாலம் தொடங்குவதற்கு முன் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நல்லதங்காள் ஓடை அணையை தூர்வாரி அணையில் அதிக அளவில் தண்ணீரை தேக்கிவைக்க வழி செய்து மூலனூர் ஒன்றிய பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படவேண்டும்.

    மேலும் நல்லதங்காள் ஓடை அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள வீட்டுச்சுவர்கள். மண்திட்டுகள், பாறைகள் ஆகியவற்றை முழுமையாக அகற்றி அணையை தூர்வாருவதோடு, இந்த அணைக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புரத்தலாறு அணையில் இருந்து வரும் உபரி நீர் சண்முகநதி மூலம் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதை நல்லதங்காள் ஓடை அணைக்கு இணைக்க ஏற்கனவே போட்ட திட்டங்கள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் நல்லதங்காள் ஓடை அணையில் போதிய அளவு தண்ணீர் இப்பகுதி விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×