search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.டி.ஓ. சவுந்தர்யா ஆவேசமாக கோப்புகளை தூக்கி வீசியதை காணலாம்
    X
    ஆர்.டி.ஓ. சவுந்தர்யா ஆவேசமாக கோப்புகளை தூக்கி வீசியதை காணலாம்

    கல்குவாரி விவகாரம்- சமாதான கூட்டத்தில் ஆவேசமடைந்து கோப்புகளை தூக்கி வீசிய ஆர்.டி.ஓ.

    திருமங்கலம் அருகே கல் குவாரி தொடர்பான சமாதான கூட்டத்தில் ஆவேசம் அடைந்த பெண் ஆர்.டி.ஓ., கோப்புகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து தூசிகள் வெளியேறி விளைநிலங்களில் உள்ள பயிர்களின் மீது படிகிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் கிடைக்காமல் போகிறது. அத்துடன் குவாரிகளில் ஏற்படும் வெடி சத்தத்தினால் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது.

    அதிக சத்தம் ஏற்படுவதால் கிராம மக்கள் அமைதியான சூழலில் குடியிருக்க முடியவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கலெக்டர் வினய் கல்குவாரியை ஆய்வு செய்து மூட உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கல்குவாரி மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. அத்துடன் உரிய அனுமதி பெற்று உள்ளதாக குவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தற்போது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து குவாரி உரிமையாளர்கள் தரப்பிலும், பொதுமக்கள் சார்பாகவும் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமங்கலம் ஆர்.டி.ஓ. சவுந்தர்யா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆர்.டி.ஓ. சவுந்தர்யா குவாரி உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனால் ஆவேசம் அடைந்த ஆர்.டி.ஓ., இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதாக என கேட்டு மேஜை மீது இருந்த கோப்புகளை தூக்கி எறிந்தார். மேலும் குற்றச்சாட்டு வைத்த நபரை பார்த்து கையை நீட்டி ஆவேசமாக பேசினார்.

    இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமலேயே கூட்டம் முடிவுற்றது. பின்னர் இருதரப்பினரும் கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினர். முடிவில் குவாரியை மூடாவிட்டால் கிராம மக்கள் தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×