search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிசிஐடி அதிகாரி
    X
    சிபிசிஐடி அதிகாரி

    அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா

    மதுரையில் அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா இறந்ததை தொடர்ந்து அவருடைய உடல் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையில் இருந்து டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் நேரடி விசாரணை நடத்தியது. சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீடுகளில் தொடர்ந்து 3 நாட்களாக மேலாக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே இந்த 10 பேருக்கும் உதவுவதற்காக மதுரையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவர் துணையாக இருந்து வழக்கினை விசாரித்து வந்தார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக விசாரித்து வந்த மற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தற்போது இந்த வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழுவில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் சக அதிகாரிகள் கோவைக்கு திரும்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கொடா லொக்கா மரண வழக்கு விசாரணை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. 
    Next Story
    ×