search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோயாளி
    X
    கொரோனா நோயாளி

    மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த கொரோனா நோயாளி நடுரோட்டில் மூச்சுத்திணறி உயிரிழப்பு

    மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு தப்பி வந்த கொரோனா நோயாளி நடுரோட்டில் மூச்சுத்திணறி சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள சேரியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 45). இவர், ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் 6-ந்தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

    அங்கு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டில் அவர்களுடன் இருந்த உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்த வடிவேலு கொரோனா சிறப்பு வார்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சேரியந்தல் கூட்ரோட்டை அடுத்த ஒரு ஓட்டல் அருகில் வந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடுரோட்டில் சுருண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் வடிவேலு நடுரோட்டில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரின் உடலை பொதுமக்கள் யாரும் அப்புறப்படுத்த முன்வராமல் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து சேரியந்தல் ஊராட்சி மூலம் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஆம்புலன்சில் தொற்று பரவாமல் தடுக்கும் கவச உடை அணிந்த அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வடிவேலின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று பரிசோதனை செய்த வடிவேலுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×