search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இரும்பு மிதவை.
    X
    தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இரும்பு மிதவை.

    தனுஷ்கோடி கடலில் ஒதுங்கிய மிதவை- போலீசார் விசாரணை

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரிய மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றி மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர். கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த மிதவையை பார்வையிட்ட போது சுமார் 5 அடி உயரமும், 500 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. தொடர்ந்து அந்த மிதவையை கயிறு கட்டி இழுத்து சாலை ஓரம் உள்ள பகுதியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    இதுபற்றி கடலோர போலீசார் கூறும்போது, “கரை ஒதுங்கிய மிதவை ஆனது கடல்வழி பாதை அடையாளத்திற்காக மிதக்க விடுபவை. கடலை ஆழப்படுத்தி தோண்டும் பணியின் போது அந்த இடத்துக்கு கப்பல், படகுகள் வராமல் இருக்க அடையாளத்திற்காகவும் இதுபோன்ற மிதவை மிதக்க விடப்படும். பெரிய துறைமுக பகுதியில் இருந்து கப்பல்கள் உள்ளே சென்று வெளியே வரும் அடையாளத்திற்காகவும் மிதக்க விடுவார்கள்” என தெரிவித்தனர்.

    எனவே தனுஷ்கோடியில் கரை ஒதுங்கி உள்ள இந்த இரும்பினாலான மிதவை, தூத்துக்குடி துறைமுக பகுதியில் இருந்து காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியதா அல்லது ஆழ்கடலில் செல்லும் ஏதேனும் பெரிய கப்பல்களில் இருந்து தவறி கடலில் விழுந்து கரை ஒதுங்கியதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×