search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.

    20 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம்- கலெக்டர் மலர்விழி தகவல்

    தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு வாழ்வாதார பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஷ்ணுபிரியா, பயிற்சி அலுவலர் சிவக்குமார், உதவி பயிற்சி அலுவலர் சந்தோஷ்குமார், இளநிலை உதவியாளர் ராகுல்கிருஷ்ணன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

    மத்திய அரசு உலக வங்கியின் பங்களிப்பு நிதியோடு 2018-ம் ஆண்டு முதல் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பயிற்சி நிறுவனங்கள் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை உடனடியாக தயார் செய்யவேண்டும். அரசு போக்குவரத்துக்கழகம், அரசு பொதுத்துறை நிறுவனம் மற்றும் தனியார் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க பதிவு செய்துள்ளன. 10-ம் வகுப்பு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும். தொழிற் பயிற்சியின் முக்கியத்துவத்தையும், நன்மைகளையும் மாணவ-மாணவிகளிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு வாழ்வாதார பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 படித்தவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பயிற்சியின் மூலம் பயன் பெறலாம். பயிற்சி பெற குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். பயிற்சி பெறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி தொடர்பான பட்டியலை 15 நாட்களில் தயார் செய்து வழங்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.
    Next Story
    ×