search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    கண்ணமங்கலம் அருகே திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

    கண்ணமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

    கண்ணமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் ராஜநகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சதானந்தம்(62). இவரது மனைவி பவானி (58). இவர்களது மகன் தங்கராஜ்(28). இவர் ஜமுனாமரத்தூர் பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை சதானந்தம், பவானி ஆகிய இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு, மகன் தங்கராஜிக்கு பெண் பார்க்க வெளியூர் சென்றனர்.

    பின்னர் பகல் சுமார் 1.30 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவும் திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் 50 சவரன் நகைகளும் திருட்டு போனது தெரியவந்தது.

    உடனடியாக இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர் கைரேகைகளை பதிவு செய்தனர். திருவண்ணாமலையிலிருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காளசமுத்திரம் கிராமத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×