search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    X
    தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது- கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மட்டக்கடை பகுதி, அய்யலு சந்து கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் 2-ம் கேட், இந்திராநகர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்களுக்கும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், முககவசங்கள் அணியாமல் வெளியில் நடமாடிய 2 பேருக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது, மாநகராட்சி என்ஜினீயர் சேர்மகனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ராஜபாண்டி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அதிகமான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நேற்று முன்தினம் வரை 80 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் 12 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினமும் 2 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது அதிகரிக்கப்பட்டு நேற்று 2 ஆயிரத்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் 3 ஆயிரம் மாதிரிகள் வரை சேகரிக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தினமும் 2 ஆயிரத்து 300 முதல் 2 ஆயிரத்து 400 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்திலும் 500 மாதிரிகள் வரை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் ஒரே நாளில் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகமான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மேலும் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்த நபர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 15 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது 9.5 சதவீதமாக குறைந்து உள்ளது.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் 65 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் இறப்பு வீதம் குறைந்து உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 48 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாநகராட்சியில் 16 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிப்பதற்காக சுமார் 1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 50 முதல் 60 சதவீத படுக்கைகள் மட்டுமே தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகமான நபர்கள் வந்தால் கூட உடனடியாக படுக்கைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×