search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்
    X
    மதுரை ஐகோர்ட்

    வனவிலங்கு பாதுகாப்பு விதியை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

    “வனவிலங்கு பாதுகாப்பு விதியை இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை” என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்ற தீரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தேனி மாவட்டமானது 1.05 லட்சம் எக்டேர் வனப்பகுதியை கொண்டுள்ளது. இதில் மேகமலை வனப்பகுதியும் அடங்கும். இந்த பகுதியில் உருவாகும் ஊற்றுநீர் முல்லைப்பெரியாறு அணையை வந்தடைகிறது.

    இங்கிருந்து வைகை ஆற்றிலும் ஊற்று நீர் கலக்கிறது. வைகை ஆற்றை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஆற்று நீர் கடலில் கலப்பது அரிதாகிவிட்டது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேகமலை வனப்பகுதியின் தொடர்ச்சியாக பெரியாறு புலிகள் சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயமும் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள சிலர் வியாபார நோக்கில் காட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை வளர்ப்பதால் நிறைய லாபம் கிடைக்கிறது. இதனால் ஏராளமான மாடுகளை வளர்க்கின்றனர்.

    இதேபோல் சிலர் ஆடு வகைகளையும் வளர்த்து வருகின்றனர். அவற்றை மேகமலை வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விடுகின்றனர். இவை மேகமலையில் அடர் வனப்பகுதிக்குள் சென்று புற்களை அழித்து வருகின்றன. இதன் காரணமாக காட்டில் உள்ள யானைகள், மான்கள் போன்ற உயிரினங்கள் இரை இன்றி பாதிக்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு வனப்பகுதியில் செல்லும் ஆடுகளையும், மாடுகளையும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும்பொருட்டு அவற்றுக்கு விஷம் வைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

    புற்கள் அழிக்கப்படுவதால் ஊற்று சுரப்பதும் தடுக்கப்படுகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை ஆற்றுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகிறது. பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால் மேகமலை வனப்பகுதியில் ஆடு, மாடுகளின் மேய்ச்சலுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது “வனப்பகுதி, வனவிலங்கு பாதுகாப்பு விதிகள் இருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றனர்.

    பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேனி மாவட்ட கலெக்டர், தேனி மாவட்ட வனத்துறையினர் இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிடப்பட்டது. விசாரணை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×