search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசிய போது எடுத்த படம்.
    X
    திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசிய போது எடுத்த படம்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும்- வேளாண்மை இயக்குனர் அறிவுரை

    பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்மைத்துறை இயக்குனர் கூறினார்.
    அரசூர்:

    விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு சான்றிதழும், 4 விவசாய குழுக்களுக்கு ரூ.20 லட்சத்தில் நெல் நடவு எந்திரம், உழவு எந்திரம் போன்றவற்றையும் மானியத்தில் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், சொட்டு நீர் பாசனத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் குழாய்கள், மோட்டார்கள், கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் நல்ல முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    மேலும், தரிசு நிலங்களை கண்டறிந்து அதிலுள்ள முட்புதர்களை எல்லாம் அகற்றி சிறு தானியங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்ய தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து அதிக அளவில் பயிரிடும் விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு அரசு சார்பில் ரூ 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 425 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,271 கோடியே 58 லட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விவசாய முகாம்கள் நடத்தி விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள், இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக சேர்ந்து தங்கள் பயிரை காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றார்.

    இதில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சரஸ்வதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், செல்வ செபஸ்டியன், பெரியசாமி, திருவெண்ணெய்நல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் வேல். வேளாண்மை, அலுவலர்கள் காயத்ரி, கங்காகவுரி, ஆனந்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பாக்கியராஜ், அரிகிருஷ்ணன், சீனுவாசன், ஹேமமாலினி, பழனி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×