search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை, பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை, பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கிய போது எடுத்த படம்.

    கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள்- கலெக்டர் நேரில் ஆய்வு

    ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை கடந்தது. இதையொட்டி கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில் கடை வீதி, நாயுடு தெரு, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கடை வீதி, தளி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வீடுகள்தோறும் யாருக்கும் காய்ச்சல், சளி உள்ளதா? என்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு பவுடர்கள் அடங்கிய பாக்கெட்டுகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் நல்லசந்திரம் கிராமத்தில் மாநில நிதிகுழு 2019-2020 மூலமாக ரூ.18.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.67 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்.

    மேலும் நல்லசந்திரம் கிராமத்தில் ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி புனரமைப்பு பணியை பார்வையிட்டு கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சுபாராணி, சென்னகிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ராயக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×