search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சென்னை ஐகோர்ட்டில் 31-ந்தேதி வரை காணொலி காட்சி மூலமே விசாரணை

    சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வருகிற 31-ந்தேதி வரை காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், தற்போது ஐகோர்ட்டுகளை திறக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டுகளிலும் காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதற்கு வக்கீல்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது.

    எனவே ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட வக்கீல் சங்க நிர்வாகிகள் ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டிக்கு கோரிக்கை விடுத்தனர். சென்னை ஐகோர்ட்டு முன்பு இதே கோரிக்கையுடன் சில வக்கீல் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதிகள் தற்போதுள்ள சூழ்நிலையை ஆராய்ந்தனர்.

    இதையடுத்து ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசும், தமிழக அரசும் ஊரடங்கை வருகிற 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தினமும் அரசு வெளியிடும் செய்திக்குறிப்புகளையும் நிர்வாக கமிட்டி நீதிபதிகள் ஆராய்ந்தனர். வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை இன்னும் தொடர்ந்து வருவதால், நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகளில் எந்த தளர்வையும் செய்ய முடியாது என்று முடிவு செய்துள்ளனர். எனவே, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் தற்போது எந்த முறையில் (காணொலி காட்சி) வழக்குகளை விசாரித்து வருகிறதோ, அதேமுறை வருகிற 31-ந்தேதி வரை தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின்படி சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்றங்கள் தற்போது காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன.

    அந்த நிலை இம்மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தற்போது ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை திறப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×