search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிவேல் வீரவேல் ஒட்டும் வினோஜ் ப. செல்வம்
    X
    வெற்றிவேல் வீரவேல் ஒட்டும் வினோஜ் ப. செல்வம்

    10 லட்சம் வீடுகளில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டுதல்: பாஜக இளைஞரணி தலைவர் தொடங்கி வைத்தார்

    தமிழகம் முழுவதும் 10 லட்சம் வீடுகளில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டும் பணியை பா.ஜனதா இளைஞரணி தலைவர் வினோஜ் ப. செல்வம் தொடங்கி வைத்தார்.
    தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் எல். முருகனின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டவும், 1 லட்சம் இல்லங்களுக்கு “கந்த சஷ்டி கவசம்” புத்தகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இன்று தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். அதேபோல ‘கந்தசஷ்டி கவசம்’ புத்தகங்களையும் வழங்கினார்கள்.

    பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம், சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் உள்ள வீடுகளில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கரை ஒட்டி தொடங்கி வைத்தார். அதேபோல ‘கந்த சஷ்டி கவசம்’ புத்தகங்களையும் அவர் வீடுவீடாக சென்று வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம், வினோஜ் ப செல்வம் கூறியதாவது:-

    இந்து மதத்தை மட்டும் அல்ல, எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் அதனை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை சாமி கும்பிட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கோவிலுக்கு வாருங்கள் என்று அவர்களை யாரும் அழைப்பதில்லை. அது அவர்களின் உரிமை. அதேபோல் சாமி கும்பிடுபவர்களையும், கோவிலுக்கு செல்பவர்களையும், அவர்களின் நம்பிக்கையும் காயப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது.

    கறுப்பர் கூட்டம் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் மிகவும் ஆபாசமாக வர்ணித்து உள்ளனர்.

    கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கிய வினோஜ் ப. செல்வம்

    எனவே முருகப்பெருமானையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவு படுத்தியவர்களை கண்டிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் பத்து லட்சம் வீடுகளில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்படி இன்று தமிழகமெங்கும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கரை வீடுகள்தோறும் சென்று ஒட்டி வருகின்றனர்.

    வெற்றிவேல்! வீரவேல்!!

    இவ்வாறு பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் கூறினார்.
    Next Story
    ×