search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூர்வாரப்பட்டும், தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டு கிடக்கும் வாய்க்கால்
    X
    தூர்வாரப்பட்டும், தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டு கிடக்கும் வாய்க்கால்

    கட்டளை மேட்டு வாய்க்கால்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

    10 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக உள்ளதால், சம்பா நெல் சாகுபடிக்கு கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    நச்சலூர்:

    கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் தாயனூருக்கு புதிய, பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் செல்கின்றன. இந்த பாசன வாய்க்கால்கள் மூலம் இனுங்கூர், நச்சலூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு, சூரியனூர், முதலைப்பட்டி, பொய்யாமணி ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு, உளுந்து ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் செல்கிறது. ஆனால், புதிய, பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் கடைமடை பாசனத்திற்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆடிப்பட்டமான சம்பா நெல் சாகுபடியை செய்யாமல் விவசாயிகள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கட்டளை மேட்டு வாய்க்கால்களால் பாசன வசதி பெறும் விவசாயிகள் கூறியதாவது:- 

    மாயனூரில் இருந்து பிரிந்து வரும் புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள், ஆடி மாதம் உழவு பணியில் ஈடுபடுவர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் சம்பா நெல் சாகுபடி செய்யாமல் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் தரிசு நிலம் போல் காட்சியளிக்கின்றது.

    இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போது தண்ணீர் திறந்தால் மட்டுமே நெல் சாகுபடி செய்ய உகந்த காலமாக இருக்கும். தண்ணீர் திறப்பு தள்ளி சென்றால் அதிக மகசூல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×