search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூரில் பெற்ற மகன் தவிக்க விட்டதால் மூதாட்டி தெருவில் படுத்திருந்த காட்சி
    X
    துறையூரில் பெற்ற மகன் தவிக்க விட்டதால் மூதாட்டி தெருவில் படுத்திருந்த காட்சி

    கொரோனா பீதியில் பெற்ற தாயை நடுத்தெருவில் விட்டுச்சென்ற மகன்

    துறையூரில் கொரோனா பீதியில் பெற்ற தாயை நடுத்தெருவில் மகன் விட்டுச்சென்றார். பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டி செய்வதறியாது தவித்தார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம், துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வெவ்வேறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் 72 வயது தாய் இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 11-ந்தேதி இளைய மருமகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் அந்த மூதாட்டி தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்த மூதாட்டியின் இளைய மருமகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மூதாட்டியின் இளைய மகன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு வந்துவிட்டார்.

    இதையறியாத மூதாட்டி, மூத்தமகன் வீட்டில் இருந்து புறப்பட்டு இளைய மகன் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு வீடு பூட்டி இருந்ததால், அவர் பக்கத்து வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்தார். அவருக்கு அதிகமாக இருமல் இருந்ததுடன், காய்ச்சலும் இருந்ததால், அந்த தெருவில் உள்ளவர்கள், மூதாட்டியை அவருடைய மூத்த மகன் வீட்டிற்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தனர். மூத்த மகன், தனது தாயை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். அங்கு, தற்போது கொரோனா பரிசோதனை செய்ய முடியாது. காலையில் அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். இதனால், தாய் என்றும் பாராமல் அன்று இரவே, தனது தாயை தம்பி வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை வீதியில் படுத்து இருந்த அந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி மூத்தமகன் வீட்டுக்கு செல்லும்படி அனுப்பிவைத்தனர். தனது தாயை எப்படியும், தன் வீட்டுக்கு தான் அனுப்பிவைப்பார்கள் என்று கணித்த மூத்தமகன், நேற்று முன்தினம் இரவே வீட்டை பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே கொரோனா பீதியில் அந்த மூதாட்டி அங்கு இருக்கக்கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த மூதாட்டி நடுத்தெருவில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிங்களாந்தபுரம் ஊராட்சி தலைவர், அந்த மூதாட்டியை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். கொரோனா பீதியில் பெற்ற தாயை வயதான காலத்தில் மகன் தெருவில் தவிக்க விட்டது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
    Next Story
    ×