search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் வேலுமணி
    X
    அமைச்சர் வேலுமணி

    99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம்- அமைச்சர் வேலுமணி பெருமிதம்

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
    சென்னை:

    உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதனின் அடிப்படை உயிர்த் தேவையான குடிநீரை, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைவில்லாமல் தருவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிற “ஜல் ஜீவன் மிஷன்” என்கிற திட்டத்தை “ஜல் சக்தி மிஷன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்கிறார். அதில் குற்றத்தை கண்டுபிடித்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

    ரூ.10 லட்சத்திற்கு மேலான நிதிச் செலவில் உருவாகும் திட்டங்கள் அனைத்தும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என்பதை அறியாத இவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்தபட்சம் ரூ.20 லட்சத்திற்கு மேலான தொகையில் நடத்தப்படுகிற குடிநீர் திட்டங்களை ஏன் ஊராட்சி அமைப்புகளுக்குத் தரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, பள்ளி கல்வித் துறை, சுகாதாரத் துறை, தமிழ் வளர்ச்சி செய்தித் துறை, மத்திய அரசின் உறுப்பினர் செயலர் மற்றும் குடிநீர் வழங்கலில் மூத்த தொழில்நுட்ப வல்லுனர் ஆகியோர் அடங்கிய மாநில அளவிலான ஒரு குழுவும், மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து, குழுவின் கருத்துருவின் அடிப்படையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, திட்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு, நிதி விடுவிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த குழுக் கண்காணித்து வருகிறது. இப்பணியை ஊரக வளர்ச்சித் துறையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயல்படுத்துகிறது.

    ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்த இருக்கும் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலர், ஒப்பந்ததாரர் ஆகிய 3 நபர்கள் கையொப்பமிட வேண்டும். மேலும், இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்படும்போதும் ஊராட்சி மன்றத் தலைவர், ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலர், மூன்றாம் தரப்பு பொறுப்பு அலுவலர் பார்வையிட்ட பின்புதான் நிதியானது மத்திய அரசின், ‘ஜல்

    ஜீவன் மிஷன்’ வழிகாட்டுதல்படி, மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒற்றை நோடல் கணக்கில் இருந்து பயனாளர்களின் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படுவது போல இத்திட்டத்திலும் ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

    மேலும், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் மூலம், இத்திட்ட செயலாக்கம் நெறிபடுத்தி பணிகளை துரிதப்படுத்த, அவ்வப்போது காணொலிக்காட்சி வாயிலாக மாநில அளவிலான குழுவிடம் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு தெருக்குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    கிராம வாரியாக மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் தற்போது குடிநீர் இணைப்புள்ள வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டிய வீடுகள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்திற்கான விவரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020-2021 முதல் 2023-2024 ஆகிய 4 ஆண்டுகளில் பகுதிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 100 சதவீதம் இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவொரு குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுப்பது வேதனைக்குரியது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×