search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் அதிகபட்ச விற்பனை விலை அச்சிடப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    ஆவின் பால் பாக்கெட்டுகளில் அதிகபட்ச விற்பனை விலை அச்சிடப்பட்டுள்ளதை காணலாம்.

    கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்பனை- நுகர்வோர் புலம்பல்

    நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் புலம்பி தவித்து வருகிறார்கள்.
    திருச்சி:

    ஆவின் பால் நிறுவனம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. திருச்சி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமானது திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தனியார் பாக்கெட் பாலினை விட குறைந்த விலையில் தரமான ஆவின் பால் பாக்கெட்டுகள், உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    3 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால், 604 சங்கங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அவர்கள் உற்பத்தி செய்யும் தரமான பாலை அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்து பாலை பதப்படுத்தி தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை தயார் செய்து நுகர்வோருக்கு வழங்கி வருகிறது.

    மேலும் ‘கொரோனா வைரஸ்‘ தாக்கத்தால் அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இக்கட்டான காலத்திலும் பிற தனியார் நிறுவனங்கள் பால் வினியோகத்தினை நிறுத்தியிருந்த வேளையிலும், ஆவின் நிறுவனம் மட்டுமே நுகர்வோர், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் தங்குதடையின்றி அனைத்து பகுதிகளிலும் முகவர்கள் மூலமாக பால் வினியோகம் செய்துவருகிறது.

    ஆவின் நிறுவனம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலிலிருந்து நிலைப்படுத்திய பால், சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்புப்பால் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் ஆகிய வகைகளில் பேக்கிங் செய்து அனைத்து வகையான நுகர்வோரும் பயன்பெறுமாறு விற்பனைக்கு அனுப்பி வருகிறது.

    இப்படி பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் முகவர்களுக்கு ஆவின் நிறுவனமானது நகர்ப்புற முகவர்களுக்கு 6 சதவீதமும், திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகள், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அனைத்து பகுதிகளுக்கும் 7 சதவீதமும் என்ற அடிப்படையில் மாதாந்திர பால் விற்பனை கமிஷன் தொகை வழங்கி வருகிறது. சமீபத்தில் தனியார் பால் நிறுவனங்கள், தங்களது விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.8 வரை உயர்த்திய போதும், ஆவின் நிறுவனம் நுகர்வோர் நலன் கருதி பழைய விலையிலேயே நிலைப்படுத்திய பால் ஒரு லிட்டரை ரூ.46-க்கும், சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால் ஒரு லிட்டரை ரூ.50-க்கும், நிறை கொழுப்பு பால் ஒரு லிட்டரை ரூ.52-க்கும் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரை ரூ.43-க்கும் விற்பனை செய்கிறது. ஆவின் நிறுவனம் ஒவ்வொன்றையும் நுகர்வோர் நலன்கருதி செய்வதை, திருச்சியில் சில முகவர்களும், அவர்களிடம் இருந்து பால் பாக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்யும் சிலர், பால் பாக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    நுகர்வோர் சிலர், ஏன் கூடுதல் விலைக்கு விற்கிறீர்கள் என்று கேட்டால், பாக்கெட்டுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை அதிகமாக விற்றால்தான் கட்டுப்படி ஆகிறது. இஷ்டம் இருந்தால் வாங்குங்கள்... என்று அலட்சியமாக பேசுவதாக நுகர்வோர் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.

    500 மில்லி நிலைப்படுத்திய பால் பாக்கெட் கார்டு போட்டு வாங்கும் நுகர்வோருக்கு ரூ.22.50 என்றும், ரொக்கமாக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு ரூ.23 என்றும் அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயம்(எம்.ஆர்.பி.) செய்யப்பட்டுள்ளது. ஆனால், நுகர்வோரிடம் விற்பதோ ரூ.25-க்கு தான். இதுபோல சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால் 500 மில்லி ரூ.25 என்றால், விற்கப்படுவதோ ரூ.27 ஆகும். அதாவது எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக 500 மில்லிக்கு ரூ.2 கூடுதல் விலை என்கிறபோது 1 லிட்டருக்கு கூடுதலாக ரூ.4 வரை கூடுதல் லாபம் கிடைக்கிறது. தினமும் ஒரு வீட்டில் 1 லிட்டர் பால் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் மாதந்தோறும் ரூ.120 கூடுதலாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக திருச்சி ஆவின் பொதுமேலாளர் வடிவேல் பிரபுவிடம் கேட்டபோது,‘ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யும் முகவர்களிடம் விலைப்பட்டியல் ஏற்கனவே வைக்க சொல்லி இருக்கிறோம். விலைப்பட்டியல் படி, பால் பாக்கெட்டுகளை விற்கவில்லை என்றால் நுகர்வோர் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மண்டல அளவில் உதவி பொதுமேலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆவின் பால் தரமானது. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து, பால் பாக்கெட்டில் என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதற்கு மேல் கூடுதல் தொகை கொடுக்க வேண்டாம்” என்றார்.
    Next Story
    ×