search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்

    சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு, மாநகராட்சி என்ஜினீயர் காதல் வலை வீசி உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா தடுப்பு பணியில் பெரும் பதற்றத்தோடும், பரபரப்போடும் ஈடுபட்டு வருகிறார்கள். கல்லூரி மாணவ- மாணவிகளும் இந்த பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளனர். இந்த சூழலில் சென்னை மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் தன்னோடு கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசி உள்ளார்.

    அவர் அந்த மாணவிக்கு செல்போனில் கிளுகிளுப்பாக பேசி தனது காதலை வெளிப்படுத்திய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் ரசம் சொட்ட அந்த என்ஜினீயர் பேசிய பேச்சும், அதற்கு அந்த மாணவி அளித்த பதில்களும் வருமாறு:-

    என்ஜினீயர்:- நான் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பேசுகிறேன். உன்னை காணாமல், பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை. நான் உன்னை விரும்புகிறேன். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது.

    மாணவி பதில்:- நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. என்னோடு பணிபுரியும் அனைவருக்கும் என்னை பிடிக்கும். எனக்கும் அவர்களை பிடிக்கும்.

    என்ஜினீயர்:- உன்னை எனக்கு வேறுவிதமாக பிடித்திருக்கிறது. அதன் அர்த்தம் உனக்கு புரியவில்லையா?.

    மாணவி:- நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை சார். என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    என்ஜினீயர்:- கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறாய். நான் உன்னை விரும்புவதாக சொல்கிறேன். அதன் அர்த்தம் உனக்கு தெரியவில்லையா?.

    மாணவி:- தெரியவில்லை. புரியும்படி சொல்லுங்கள்.

    என்ஜினீயர்:- 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் உன்னை சந்தித்திருந்தால், நீ எனக்கு திருமதி ஆகியிருப்பாய். நான் உன்னை தான் மணம் முடித்திருப்பேன்.

    மாணவி:- சார், இப்படியெல்லாம் சொல்லி என்னை கலாய்க்காதீர்கள் சார்.

    இதுபோல் என்ஜினீயரின் காதல் வசனம் அந்த மாணவியிடம் தொடர்கிறது. திருமணம் ஆன அந்த என்ஜினீயரின் தொல்லை தாங்காமல் குறிப்பிட்ட அந்த மாணவி இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் முறையிட்டுள்ளார்.

    துணை கமிஷனர் ஜெயலட்சுமி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×