search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தபோது எடுத்த படம்.
    X
    செட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தபோது எடுத்த படம்.

    மோகனூரில் வாய்க்கால் சீரமைப்பு திட்டப்பணி அலுவலக செட்டில் திடீர் தீ

    மோகனூரில் வாய்க்கால் சீரமைப்பு திட்டப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த அலுவலக செட்டில் ஏற்பட்ட திடீர் தீயில் ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள், 15 கணினிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த மணப்பள்ளி காவிரி ஆற்றங்கரையில் மோகனூர் வாய்க்கால் மேம்பாட்டு பணிக்காக அலுவலகம், பணியாளர்கள் தங்குவதற்கு 2 செட் கீற்றால் வேயப்பட்டு இருந்தது. அதன் மேல் தகர சீட் போட்டு செட் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டம் முள்ளம்பரப்பை சேர்ந்த செல்வரத்னம் என்பவரின் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் இந்த வேலை நடைபெற்று வந்தது. இங்கு 50 பணியாளர்களும், 60 தொழிலாளர்களும் தங்கி பணியாற்றி வந்தனர். மேலாளராக யுவராஜ், (வயது 38) என்பவர் பணியாற்றி வந்தார். சரசு, (52), தமிழ் (26) ஆகியோர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் சரசு, தமிழ் இருவரும் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது செட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென செட் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் செட் முழுவதும் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

    இந்த சம்பவத்தில் சமையலர் சரசு, உதவியாளர் தமிழ் ஆகிய இருவருக்கும், லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் செட்டில் இருந்த 15 கணினிகள், கேபிள் வயர், ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள், ஆயில், தளவாட பொருட்கள், தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவலறிந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் மின்கசிவால் தீ ஏற்பட்டதா? அல்லது கியாஸ் கசிவு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×