search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் படுகொலை ஏன்?- கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

    நாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் கூலிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). இவர் பட்டறை மேட்டில் ‘ஸ்டிக்கர்’ மற்றும் கண்ணாடி கடை நடத்தி வந்தார். கடந்த 30-ந் தேதி இரவு நாமக்கல் பெருமாபட்டி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்கூட்டர் அடமானம் பிடித்தது தொடர்பான மோதலில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த டான் சரவணன் (30), சஞ்சீவி (33), சேலம் பாண்டியன் (27), தனியார் கல்லூரி மாணவர் நிவாஷ் (20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக டான் சரவணன் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெயக்குமாரிடம் எனது நண்பர் சஞ்சீவி, ஸ்கூட்டரை ரூ.15 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.35 ஆயிரம் கேட்டு வந்தார். சஞ்சீவி வைத்திருந்த மற்றொரு மொபட்டையும் ஜெயக்குமார் பிடுங்கி கொண்டார்.

    இதற்கிடையே எனக்கும், ஜெயக்குமாருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி கடந்த 30-ந் தேதி இரவு ஜெயக்குமார் பெருமாபட்டியில் மது குடித்து கொண்டு இருந்தார். இதை பார்த்த நான் நண்பர்களான சஞ்சீவி, நிவாஷ், பாண்டியன் ஆகியோரை பெருமாப்பட்டிக்கு வரவழைத்தேன். சம்பவ இடத்திற்கு ஜெயக்குமாரை அழைத்து சென்ற நான் அவருடன் மது குடித்து கொண்டு இருந்தேன். பின்னர் அங்கு வந்த 3 பேரும் ஜெயக்குமாரை பிடித்துக்கொள்ள நான் பாண்டா கத்தியால் அவரை வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    இந்த கொலைக்கு பயன்படுத்தி பாண்டாகத்தி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டான் சரவணன் உள்பட 4 பேருக்கும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரையும் போலீசார் நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×