search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவுளிக்கடையில் எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த காட்சி.
    X
    ஜவுளிக்கடையில் எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த காட்சி.

    திருக்கோவிலூர் அருகே ஜவுளிக்கடையில் தீ விபத்து

    திருக்கோவிலூர் அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மும்முனை சந்திப்பில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ஆதம்பாஷா (வயது 55). இவர் தனது கடையின் மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஆதம்பாஷா கடையை பூட்டினார். பின்னர் அவர் வீட்டின் மாடிக்கு சென்று தனது மனைவி பாத்திமா மற்றும் மகன், மருமகள், 2 பேரப்பிள்ளைகளுடன் தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலை 5.45 மணிக்கு ஜவுளிக்கடை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதோடு, தீ விபத்து குறித்து அவர்கள் ஆதம்பாஷாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்து உயிர்பிழைத்தார். இதற்கிடையே கடையில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் கடையில் இருந்து அதிகளவில் புகைவெளியேறியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம், திருக்கோவிலூர், வேட்டவலம் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×