search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை, திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசிய போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை, திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

    குமரியில் கொரோனா பாதிப்பு முழு விவரங்களை வெளியிட வேண்டும்- திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரிசோதனை முழு விவரங்களை வெளியிட வேண்டும் என்று கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து பேசினர். அப்போது ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா வைரஸ் நோய் குமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருவது மிகவும் ஆபத்தானது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மக்கள் நினைக்கின்றனர். இதற்கு தகுந்தாற்போல் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் துல்லியமாக வெளியிடப்படவில்லை.

    இந்த விவரங்களை சரியாக தெரிவிக்கும் போது மக்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த முக்கிய தகவல்கள் தேவையற்ற முறையில் மாவட்ட நிர்வாகத்தால் நிறுத்தப்படுகின்றன.

    குமரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தேதி வாரியான பரிசோதனை செய்யப்பட்ட விவரங்களை பெயர், முகவரியுடன் வழங்க வேண்டும். ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த நபர்களின் முழு விவரங்களை அளிக்க வேண்டும். கொரோனா நோய் பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை தேதி வாரியாக வழங்க வேண்டும்.

    ஈரானில் இருந்து மீட்கப்பட்டு, குமரி மாவட்டத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்திப்பதற்கும், அவர்கள் வீடுகளுக்கு செல்லும் வரை அவர்களுக்கு தேவையான உணவை தி.மு.க. சார்பில் வழங்குவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

    ஈரான் நாட்டில் இருந்து மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வந்ததில் எச்.வசந்தகுமார் எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. முதன்முதலாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரம் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வலியுறுத்தி பேசினோம். இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாகத்தான் ஈரானில் இருந்து மீனவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பின் போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×