search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தானியங்கி சானிடைசர் கருவியுடன் மாணவர் அபிஷேக்
    X
    தானியங்கி சானிடைசர் கருவியுடன் மாணவர் அபிஷேக்

    ‘தானியங்கி சானிடைசர் கருவி’- என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அசத்தல்

    கொரோனா காலத்தில் பயன்படும் வகையில் தானியங்கி சானிடைசர் கருவியை கோவில்பட்டியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அபிஷேக். இவர், நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கொரோனா காலத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வரும் சானிடைசரை எளிதாக கையாளும் வகையில் தானியங்கி கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியிலுள்ள சிறிய குழாய் அருகில் கையை நீட்டினால் 5 முதல் 6 மில்லி வரையிலான சானிடைசர் கொட்டும். இதன் மூலம் தேவையில்லாமல் சானிடைசர் விரையம் ஆவது தடுக்கப்படும். கருவியில் சானிடைசர் அளவை காணவும், எளிதாக நிரப்பும் வகையில் கருவியை வடிவமைத்துள்ளார்.

    இதுகுறித்து மாணவர் அபிஷேக் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அனைவரும் வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பி வரும்போதும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர். இதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

    அதிக பயன்பாட்டில் உள்ள இந்த சானிடைசரை எளிதாகவும், வீணாகாமலும், தேவைக்கு ஏற்பவும் பயன்டுத்தும் வகையில் தானியங்கி சானிடைசர் கருவியை வடிவமைத்துள்ளேன்.

    இந்த கருவியில் ஐ.ஆர். சென்சார், டிரான்சிஸ்டர் மற்றும் பம்ப் மோட்டாரை பயன்படுத்தி உள்ளேன். இந்த கருவியிலுள்ள சிறிய குழாய் அருகில் கையை நீட்டினால் போதும், 5 முதல் 6 மில்லி வரை சானிடைசர் கொட்டும். அதை கைகளில் தேய்த்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கருவியின் சானிடைசர் கொள்ளளவு 1200 மில்லி ஆகும். தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நுழைவு வாயில் பகுதியில் இந்த கருவியை பொருத்தி பயன்படுத்தலாம். ஒருமுறை சானிடைசரை நிரப்பினால், 200 பேர் பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×