search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா- பொதுமக்கள் பீதி

    சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு போடுவதற்கு முன்பாகவே பல ஆயிரம் பேர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

    தினமும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, சின்னக்கடை வீதி, பொன்னம்மாபேட்டை, ஜாகீர் சின்ன அம்மாபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் நோய் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, ஏற்காடு, நங்கவள்ளி, தலைவாசல், தம்மம்பட்டி, கன்னங்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    அதாவது இனிவரும் நாட்களில் தான் பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், கடைகள், சந்தை மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளிலிருந்து வெளியே செல்வதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×