search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கக்கட்டி - கோப்புப்படம்
    X
    தங்கக்கட்டி - கோப்புப்படம்

    கோவையில் ஒரு கிலோ தங்கக்கட்டியுடன் நகை பட்டறை ஊழியர் தலைமறைவு

    கோவையில் ஒரு கிலோ தங்கக்கட்டியுடன் தலைமறைவான நகைபட்டறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கணபதி:

    கோவையில் நகை பட்டறை நடத்துபவர்கள் பெரிய நகைக்கடைகளில் தங்கக்கட்டிகளை வாங்கி நகையாக செய்து திருப்பி தருவது வழக்கம். இதுபோன்று நகைகளை செய்து தருவதற்கு கோவையில் நூற்றுக்கணக்கான நகை பட்டறைகள் உள்ளன. அதுபோல கோவை சுக்ரவார்பேட்டையில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் சிவக்குமார். இவர் கோவையில் உள்ள பல நகைக்கடைகளிலிருந்து தங்கக்கட்டிகளை வாங்கி அதை நகையாக செய்து தருவது வழக்கம்.

    அதன்படி கடந்த 27-ந் தேதி தனது கடையில் வேலை செய்யும் விருதுநகரை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவரை 100 அடி சாலையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு சென்று ஒரு கிலோ தங்கக்கட்டி கொடுப்பார்கள். அதை வாங்கி வா. அதை நகையாக செய்து அந்த கடைக்காரர்களுக்கு திருப்பி தர வேண்டும் என்று கூறி தங்கக்கட்டி வாங்கி வர அனுப்பினார்.

    ஆனால் அந்த நகைக்கடைக்கு சென்று தங்கக்கட்டியை வாங்கிய பிரபு அதன்பின்னர் நகை பட்டறைக்கு திரும்பி வரவில்லை. தங்கக்கட்டி வாங்கச்சென்ற பட்டறை ஊழியரை நீண்ட நேரமாக காணவில்லை என்று நினைத்து பிரபுவின் செல்போனுக்கு சிவக்குமார் டயல் செய்தார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பிரபுவை பல இடங்களில் தேடினார். ஆனால் பிரபு எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தங்கக்கட்டியுடன் பிரபு தலைமறைவானது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கோவை ரத்தினபுரி போலீசில் சிவக்குமார் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு கிலோ தங்கக்கட்டியுடன் தலைமறைவான நகை பட்டறை ஊழியரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பிரபுவின் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளனர். இதுதவிர பிரபுவின் நண்பர்கள் யாராவது கோவையில் இருக்கிறார்களா? அங்கு அவர் சென்றாரா? அல்லது தங்கக்கட்டியுடன் பிரபு வேறு எங்காவது தப்பிச் சென்று விட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×